இரண்டாவது கோவிட் அலையின் போது இலங்கையில் 40 - 50 வரையான பகுதிகளே சிவப்பு வலயமாக இருந்தன. மூன்றாவது அலையில் 98 வீதம் அதாவது முழு பகுதியும் சிவப்பு வலயமாக மாறியுள்ளது. இது ஆபத்தான நிலைமையாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில நாடுகள் இலங்கையை சிவப்பு பட்டியலில் தரப்படுத்தியுள்ளன. அதேபோன்று, எச்சரிக்கை வலயத்தில் இலங்கை 3ஆவது இடத்தில் உள்ளது. இதனைக் கொண்டு பார்க்கும்போது நாங்கள் ஆபத்தான நிலையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாட்டில் நாளுக்கு நாள் கோவிட் நோயாளர்கள் அதிகரிக்கின்ற நிலையில் கோவிட் நிலவரம் நாளுக்கு நாள் வேறுபடலாம். இவ்வாறு வேறுபடும்போது இதன் முகாமைத்துவமும் நாளுக்கு நாள் வேறுபடும்.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை பயணக்கட்டுப்பாடுகளை விதித்தாவது கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையை, மரணங்களின் எண்ணிகையை குறைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
கோவிட் தொற்றின் நிலைமை குறைவடையும் போது இறுக்கமான நடைமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படலாம். மோசமடையும் பட்சத்தில் இறுக்கமான நடைமுறைகளை மேலும் விஸ்தரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அரசாங்கம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் செயற்பாடுகளே திருப்தி அளிக்கவில்லை. புத்தாண்டுக்கு முன்னரே நாங்கள் புத்தாண்டு கொத்தணி உருவாகும் என எச்சரிக்கை விடுத்திருந்தோம்.
எனினும் அதனை பொருட்படுத்தாத பொதுமக்களின் செயற்பாடுகளே இன்று இவ்வாறானதொரு நிலைமைக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானங்கள் எங்களுக்கு திருப்தி அளித்தாலும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைக்கும் பட்சத்திலேயே நாங்கள் கோவிட் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..