சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையில் இலங்கை பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய தகவல் பதிவுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“Verité Research” என்ற நிறுவனத்தின் ஊடாக இந்த விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிய வருகிறது.
நாடு என்ற வகையில் அந்தந்த நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்கள், எந்த நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற தெளிவான தகவல்கள் இன்மை, அரச வெளிநாட்டுக் கடன் அளவு உண்மையான தொகையை விட குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளமை மற்றும் சில வெளிநாட்டுக் கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோது அவை காணாமல் போயுள்ளமை ஆகிய மூன்று பரபரப்பை ஏற்படுத்தும் காரணிகள் இந்த “Verité Research” நிறுவனத்தினால் நடத்தப்பட்டுள்ள விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட மூலங்களை குறிப்பிடுதலின் கீழ் அரச கூட்டுத்தாபனங்கள் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்களில் சேர்க்காமை காரணமாக 2019ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு செலுத்த வேண்டிய முழு கடன் தொகையின் அளவானது உண்மையான அளவினைவிடவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தில் சீனாவுக்கு சுமார் 5429 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என்ற போதிலும், 3387 டொலர்களாக அது அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக திறைசேரியிடம் இருந்து 2007-2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் 2014ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபையின் கணக்கிற்கு மாற்றப்பட்டு, மீண்டும் 2017ஆம் ஆண்டில் திறைசேரியின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளமையும் விசாரணையில் புலப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் கடன் அளவானது 2019ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய மிகுதிக் கடன் தொகையானது, திறைசேரியின் கணக்கிலோ அல்லது துறைமுக அதிகார சபையின் கணக்கிலோ குறிப்பிடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
0 Comments
No Comments Here ..