ஒழுக்க விதிகள் மற்றும் சட்டவிதிகளுக்கு முரணான வகையில் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்கள் பணியாற்றும் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
“பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும் ஒழுக்க விதிகளுக்கு புறம்பான மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அண்மைகாலமாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
“இவற்றுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக அடையாளம் காணப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது பணி இடைநிறுத்தம் செய்யப்படுகின்றனர்.
“இந்நிலையில் ஒரு சிலரின் இது போன்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பொலிஸாரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் இவ்வாறு அடையாளம் காணப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதேவேளை இத்தகைய பொலிஸ் உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..