அரசியல் தேவைகளுக்கான போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்காமல் பேச்சுவார்த்தைக்கு வருவதே சிறந்தது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரை முன்நிறுத்திய சேவையை உயர்மட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கும் அதனூடாக இலங்கையின் இலவசக் கல்வி முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடியும்.
எனவே இதுவிடயத்தில் அரசியல் அபிலாஷைகள் மற்றும் போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க இடமளிக்காமல் ஜனாதிபதியுடனும் கல்வியமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தி , இப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்ததுரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
அண்மைக்காலத்தில் உலகநாடுகள் அனைத்தும் பாரிய பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் எமது நாட்டில் அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டுவரும் சுமுகமான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
2020 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வருமானமான 1216 பில்லியன் ரூபாவில் 86 சதவீதமானவை அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் வேதனக் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளன.
அவ்வாறிருக்கையில் ஏனைய செலவினங்களை ஈடுசெய்வதற்கேற்ற போதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்துவது அல்லது செலவினங்களைக் குறைப்பது அல்லது நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற மாற்றுவழிகளை தான் கையாளவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..