பொதுவாக வெங்காயத்துக்கு நாம் அளிக்கும் முக்கியத் துவத்தில் ஒரு சதவிகிதத்தைக்கூட `ஸ்பிரிங் ஆனியன்’ என்கிற வெங்காயத்தாளுக்குக் கொடுப்பதில்லை.
காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தாள் கண்ணில்படும்போதெல்லாம் `சூப், புலாவில் தூவுகிற விஷயம்தானே’ என்று கடந்துசென்றுவிடுவோம்.
உண்மையில் ஏராளமான சத்துகளைத் தனக்குள் தக்கவைத்துக் கொண்டு அமைதி காக்கிறது வெங்காயத்தாள். இதில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் நிறையவே இருக்கின்றன. கால்சியமும் பொட்டாசியமும் மெக்னீசியமும் நிறைந்துகாணப்படுகின்றன. அவற்றோடு வைட்டமின்கள் ஏ, சி, பி6 ஆகியவையும் உள்ளன.
சத்தும் சுவையும் நிறைந்த இந்த வெங்காயத்தாளைப் பயன்படுத்தி வித்தியாசமான ரெசிப்பிகளை நீங்களும் செய்து பார்க்கலாம்.
வெங்காயத்தாள் சூப்
தேவையானவை:
வெங்காயத்தாள் (நறுக்கியது) - ஒரு கப்
தேங்காய்ப்பால் - 2 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
ஸ்வீட்கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
குடமிளகாய் (நறுக்கியது) - கால் கப்
அலசி ஆய்ந்த கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
சூப் பிஸ்கட் க்யூப் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
தக்காளி, இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் குடமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். தக்காளி - இஞ்சி சாற்றை ஊற்றவும். உப்பு, ஸ்வீட் கார்ன் சேர்க்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி, மிதமான தீயில் அடுப்பை வைத்து சூப்பைக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி, சூப் பவுலுக்கு மாற்றி மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி, கொத்தமல்லித்தழை சேர்த்து, மேலே மொறுமொறு சூப் பிஸ்கட் தூவிப் பருகவும்.
வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி
தேவையானவை:
வெங்காயத்தாள் - ஒரு கட்டு (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 2
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீஸ் க்யூப் - 2
கஸூரி மேத்தி (உலர் வெந்தயக் கீரை) - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்டு தோல் எடுத்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, சோம்பு, வெங்காயத்தாள் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, தக்காளி சாஸ், கிரீன் சில்லி சாஸ் சேர்த்து மேலும் வதக்கவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி வைக்கும்போது சீஸ் க்யூப் சேர்த்து, கஸூரி மேத்தி தூவி ஒரு புரட்டு புரட்டி, அடுப்பை அணைக்கவும். வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி தயார்.
வெங்காயத்தாள் சாலட்
தேவையானவை:
வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப்
கோதுமைப்பொரி - 2 டேபிள்ஸ்பூன் (ஆர்கானிக் கடை, சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)
தக்காளி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த ஸ்வீட்கார்ன் - 3 டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு எடுக்கவும்)
நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் தக்காளி, ஸ்வீட்கார்ன். உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் நெய்யில் வதக்கிய வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு ஓமப்பொடி, கொத்தமல்லித்தழை தூவி, கோதுமைப்பொரி சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் கிரேவி
தேவையானவை:
வெங்காயத்தாள் (நறுக்கியது) - ஒரு கப்
காலிஃப்ளவர் (உதிர்த்த பூ) - 6
தேங்காய்ப்பால் - ஒரு கப்
கசகசா - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - கால் கப் (தோல் உரிக்கவும்)
தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு - 3 பல்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முந்திரி, கசகசாவை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து, சுத்தம் செய்த காலிஃப்ளவர் பூ போட்டு வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்த்து மேலும் வதக்கி, முந்திரி விழுது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போக வதக்கி அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதிக்கவிடவும். அனைத்தும் வெந்ததும் அடுப்பை அணைத்து, வெண்ணெய் சேர்த்து, கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
வெங்காயத்தாள் ஸ்டஃப்டு மினி சப்பாத்தி
தேவையானவை:
வெங்காயத்தாள் (நறுக்கியது) - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
ஓமம் - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும்)
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
(அலசி ஆய்ந்தது) - சிறிதளவு
ஆம்சூர் பவுடர்
(உலர் மாங்காய்த்தூள்) - ஒரு சிட்டிகை
நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மாவு பிசைய:
வெதுவெதுப்பான பால் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அதனுடன் நெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துப் பிசிறி, தண்ணீருக்குப் பதில் வெதுவெதுப்பான பால் விட்டு மிருதுவாக, கெட்டியாகப் பிசையவும். 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக இட்டு பிஸ்கட் கட்டரால் சிறு சிறு வடிவமாக வெட்டிக்கொள்ளவும். தோசைக்கல்லில் நெய்விட்டு சூடானதும் மினி சப்பாத்திகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். மயோனைஸ் உடன் பரிமாறவும்.
0 Comments
No Comments Here ..