ரஷ்யாவில், ஒவ்வோர் ஆண்டும் அந்நாட்டு அதிபர் மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அப்படி இந்த ஆண்டுக்கான உரையின்போது அதிபர் புதின் பேசிய சில விஷயங்களால், ரஷ்யாவின் அரசியல் ஒரேநாளில் மாறி, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதிபர் புடின் பேசும்போது... நாடாளுமன்றம், பிரதமர் பதவி, ஸ்டேட் கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரங்களை விரிவுபடுத்த உள்ளதாகக் கூறினார்.இந்த அதிகார மாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக நாடாளுமன்றத்தின் இரு அமர்வு உறுப்பினர்களின் முன்பும் விளக்கினார். தற்போதைய நடைமுறைப்படி, ரஷ்யாவின் பிரதமரை அந்நாட்டு அதிபர் நியமிப்பார். ஆனால், புதின் கொண்டுவந்துள்ள புதிய நடவடிக்கையின் மூலம் இனி பிரதமர் மற்றும் அமைச்சர்களை நாடாளுமன்றத்தின் கீழவை நியமிக்கும். இதனால் நாடாளுமன்ற கீழவைக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட உள்ளதாகவும் புதின் அறிவித்தார்.
மேலும், ஸ்டேட் கவுன்சில் குழுவுக்கு அதிக பொறுப்புகள் வழங்கி, அதன்மூலம் சர்வதேச சட்டத்தின் ஆதிக்கத்தை வலிமைப்படுத்துதல், வெளிநாட்டில் பிறந்து ரஷ்யாவில் குடியேறியவர்கள், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் சட்டங்களை வலிமைப்படுத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் பேசினார்.இவர் பேசி முடித்த அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்யப் பிரதமர் ட்மிட்ரி மெட்வதேவ் தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தக் கடிதத்தை நேற்றே அதிபரிடமும் சமர்ப்பித்துவிட்டார். இவரின் ராஜினாமா குறித்த முழுமையான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. ‘மெட்வதேவின் நோக்கங்களைப் பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது. அவர் ஒரு சிறந்த உழைப்பாளி’ என்று அதிபர் புதின் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதினும் மெட்வதேவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். புதினுக்கு முன்னதாக, அதாவது 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மெட்வதேவ் தான் ரஷ்யாவின் அதிபராக இருந்துள்ளார். பின்னர், 2012-ம் ஆண்டு புதின் அதிபராகப் பதவியேற்ற பிறகு, மெட்வதேவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது ராஜினாமாவுக்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிபரின் அதிகாரம் மற்றும் அரசியல் மாற்றத்தினால் ஏற்பட்ட அதிருப்தி என்றும் அதிபரின் பாதுகாப்பு கவுன்சிலில் மெட்வதேவை மூத்த அதிகாரியாக நியமிக்க புதின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம், புதின், ரஷ்யாவின் நிரந்தர அதிபராக இருக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தியுள்ளதாகவும், இதன் முதல்கட்டமாகவே மெட்வதேவ் ராஜினாமா செய்துள்ளதாகவும் அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..