அமெரிக்காவின் நியூயோர்க் நகரை புயல் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க சுவர் ஒன்றை எழுப்பும் திட்டத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களில் நியூயோர்க் நகரை அடிக்கடி புயல் தாக்கி வருகின்றது. இதனால் இந்த பாதிப்புகளில் இருந்து அந்நகரை பாதுகாப்பதற்காக அமெரிக்க இராணுவ பொறியலாளர்கள் ஆனது கடற்கரையில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள நியூயோர்க் துறைமுகம் பகுதியில் பெரிய சுவர் ஒன்றை எழுப்ப முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்ட செயற்பாட்டிற்கு 11,900 கோடி அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். இத்திட்டம் நிறைவடைய 25 ஆண்டுகள் ஆகும்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘புயல் தாக்குதல்களில் இருந்து நியூயோர்க் நகரை காப்பதற்காக அதனை சுற்றி 20 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் மதிப்பில் பெரிய அளவிலான சுவரை எழுப்புவது என்பது அதிக பொருட்செலவு ஏற்படுத்தும்.
அது முட்டாள்தனமானது. இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது. தேவையானபொழுது இந்த திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது. இது காண்பதற்கு பயங்கர தோற்றமளிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்பொழுது, மெக்ஸிகோ நாட்டில் இருந்து சட்டவிரோத வகையிலான அகதிகள் குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்காக மெக்ஸிகோ எல்லையை ஒட்டிய பகுதியில் மிக பெரிய சுவர் எழுப்பப்படும் என ட்ரம்ப் உறுதி கூறினார்.
எனினும், இந்த திட்டம் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் நிதிநிலையில் நெருக்கடி ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சுவர் எழுப்புவதற்கு போதிய பணம் ட்ரம்புக்கு கிடைக்கப்பெறவில்லை. இதனால் 550 மைல்கள் நீளம் கொண்ட முழு சுவரும் 2020ஆண்டு தேர்தலின்பொழுது கட்டப்படும் என ட்ரம்ப் உறுதியளித்து உள்ளார்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை அமெரிக்க நாடாளுமன்றம்தான் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..