சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரிலிருந்து இந்த வைரஸ் நோய் முதலில் பரவியது. ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
சுவாசக்கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி சீனாவில் 9 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் 8 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் முக்கிய நகரமான ஷான்காயிலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். நாடு முழுவதிலும் மொத்தம், 571 நபர்கள் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் தாக்குதலின் எதிரொலியாக வுகான் நகருக்கான விமான சேவை உள்ளிட்ட அனைத்துவிதமான பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நகருக்குள் யாரும் நுழையவும், அங்கிருந்து வெளியே செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..