எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 80% க்கும் அதிகமான வீடு வீடாக பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யும் போக்குவரத்து சேவை இயங்கவில்லை எனவும் மொத்த வாகனங்களில் 10% -20% மட்டுமே தற்போது இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
பல மாதங்களாக கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதுவரையில் பிரச்சினை தீரவில்லை எனவும், பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு காரணமாக பேக்கரி பொருட்களை தயாரிக்க தேவையான மின்சாரத்தை பெறுவதிலும், அடுப்பை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார். தற்போது பெரிய அளவில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும், காஸ் அடுப்பை இயக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..