இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை ரிஷி சுனக் தற்போது வெளியிட்டு உள்ளார்.
உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் எனது சொந்த ஊரான சவுதாம்டனுக்கு சென்றிருந்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் இதை அறிந்து அவர்கள் வருத்தமடைந்தனர். என்னை பார்க்க வர முயன்றனர், ஆனால் முடியவில்லை. எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார்.
ஆனால் அப்போது தர முடியவில்லை.
பின்னர் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்றபோது, அதை என்னிடம் கொடுத்தார். இதில் விந்தை என்னவென்றால், அதன்பிறகு நான் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். நானும், அவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு பசி எடுத்தது. அதனால், நான் அவருக்கு என் அம்மாவின் பர்பியில் சிலவற்றைக் கொடுத்தேன். அதைப்பார்த்து அம்மா சிலிர்த்து போனார். இவ்வாறு ரிஷி சுனக் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.
0 Comments
No Comments Here ..