111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது
அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டானை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
"எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்." என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.
ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்
பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.
டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1,600 அடி தூரத்தில் அந்த நீர் மூழ்கியின் பாகங்கள் கடல் படுகையில் சிதறி கிடக்கிறது. கடலுக்குள் அழுத்தத்தை தாங்குவதற்கான நீர் மூழ்கியின் பகுதி உள் வெடிப்புக்கு உள்ளானதில் அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தது உறுதியாகி உள்ளது. அவர்களது உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. நீர் மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..