ராணுவ தலைமையை கவிழ்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என வாக்னர் குழு தலைவர் கூறி உள்ளார். ரஷிய ராணுவம் எங்கள் படைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம்.
உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷியா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரஷிய படைகள் குண்டுமழை பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவும் களத்தில் இறங்கி உக்ரைன் படைகளை கடுமையாக தாக்கின.
இந்த இரண்டு தரப்பினரையும் உக்ரைன் படைகள் எதிர்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக உக்ரைன் படைகள் எதிர்தாக்குதல்கள் நடத்தி சில பகுதிகளை மீட்டுள்ளன. இது உக்ரைன் படைகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்நிலையில் ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.
உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. பல மாதங்களாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் மோதலில் ஈடுபட்டு வந்த வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம்.
நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும். எங்கள் படைகளை ரஷிய ராணுவம் கொடிய ஏவுகணைத் தாக்குதல்களால் குறிவைத்தது. அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வாக்னர் கூலிப்படையினர் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
ரஷிய படைகள் கடந்த ஆண்டு உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு சவால் அளித்து வந்தார் பிரிகோசின். ராணுவத் தலைமையை தண்டிக்க தனது படையில் சேரும்படி ரஷியர்களை அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..