அமெரிக்காவில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் சீனாவின் ஊஹான் மாநிலத்திற்கு சென்றிருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ், சிக்காக்கோ, சீட்டில், கலிபோர்னியா மற்றும் பீனிக்ஸ் பகுதிகளிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவில் கொரனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக சீன தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்த உயிர்கொல்லி குறித்து முழு அளவிலான தரவுகளையும் பெற இதுவரை முடியவில்லை என தேசிய சுகாதார ஆணையகத்தின் அமைச்சர் மா சியாஓவி தெரிவித்துள்ளார்.
சீனாவின் மத்திய நகரான வூஹானில் கடல் உணவு விற்பனை செய்யும் நிலையத்தில் கடந்த வருட இறுதியில் இந்த தொற்று வைரஸ் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையத்தில் கடல் உணவு வகைகளுடன், சட்ட விரோதமாக காட்டு விலங்குகளின் இறைச்சியும் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து இந்த வைரஸ் தொற்று பீஜிங் மற்றும் ஷங்காய் ஆகிய மாநிலங்களுக்கு பரவிய நிலையில், தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இதேவேளை உயிர்கொல்லி நோயானா கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்களை தடை செய்வதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய சீனாவில், விலங்கு விற்பனை நிலையங்களிலும் சிறப்பு அங்காடிகள், சிற்றுண்டிசாலைகள் மற்றும் இணையத்தளம் ஊடாகவும் விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.
அதேநேரம் சீனாவின் ஊஹான் மாநிலத்தை மையமாக கொண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று பேருக்கு பரவக்கூடும் என புதிய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை சீனாவில் 56 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் உலகளாவிய ரீதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..