இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள குழாய் இணைப்பின் ஊடான எரிபொருள் விநியோக திட்டம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து திருகோணமலைக்கு குழாய் இணைப்பின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கும், பின் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கான விநியோகத்தை முன்னெடுப்பதற்கும் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்னை வலுசக்தி மையத்திற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தைக் கருத்திற் கொண்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் இரு வழி விநியோகம் குறித்து ஆராயுமாறு இந்த பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி, உள்நாட்டு எரிவாயு முனையங்களுக்கான குழாய் இணைப்புகள் ஆகியவற்றின் எதிர்கால வளர்ச்சிகள் என்பன பிராந்திய எரிபொருள் மற்றும் எரிவாயு ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டும், இரு நாடுகளின் ஆற்றல் தேவைகளைக் கருத்திற் கொண்டும் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைதிட்ட சாத்தியக்கூறு, தொழில்நுட்ப தேவைகள் ஆகியவை திட்ட நோக்கத்தை இறுதி செய்வதற்கு முன் மதிப்பிடப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரலாய உயர் அதிகாரிகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம், இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. உள்ளிட்டவற்றின் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..