ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள நிலையில், இதன்போது விசேடமாக குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 21 ஆம் திகதி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தனது இந்திய விஜயத்துக்கு முன்பதாக இன்றைய தினம் பி.ப 3 மணியளவில் பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அன்றாடப்பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இச்சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பங்காளிக்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும் கலந்துகொள்வர் என்று அறியமுடிகிறது.
இருப்பினும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறிப்பாகக் கடந்த வாரம் குருந்தூர் மலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம், அதற்கான தீர்வு மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதற்கான உத்தரவாதம் என்பன பற்றி ஜனாதிபதியிடம் பேசவிருப்பதாகத் தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஜனாதிபதியினால் இச்சந்திப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பேசமுற்படுகின்ற விடயங்களின் அடிப்படையில் ஏனைய வலியுறுத்தல்களைச் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..