27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

நடுக்கடலில் பச்சையாக மீனை சாப்பிட்டு தத்தளித்த இரு உயிர்கள்

டாம் ஹான்ங்ஸ் கதாநாயகனாக நடித்து 2000-த்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் "காஸ்ட் அவே" (Cast Away). இத்திரைப்படத்தில் அவர் செல்லும் விமானம் விபத்தில் சிக்கி அவர் ஒரு ஆளில்லா தீவில் தனியாக மன உறுதியுடன் பல நாட்கள் தாக்கு பிடித்து கடைசியில் மீட்கப்படுவார். அதே போன்றதொரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.


அவுதிரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் 51-வயதான டிம் ஷேட்டாக். பெல்லா எனும் தனது நாயுடன் டிம், மெக்சிகோவின் லா பாஸ் பகுதியிலிருந்து பிரென்ச் பாலினேசியா பகுதிக்கு ஒரு படகில் கடற்பயணம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் படகு புயலால் சேதமடைந்தது.

இதனால் பல நாட்கள் அவரும், பெல்லாவும் கடலில், பச்சை மீனை உண்டும், மழை நீரை குடித்தும் தன்னந்தனியே பல நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கின்றனர். டியூனா எனப்படும் பெரிய மீனை பிடிக்கும் ஒரு இழுவை படகோடு இணைந்து ஒரு ஹெலிகாப்டர் சென்றிருக்கிறது.


அதிர்ஷ்டவசமாக அதில் உள்ளவர்கள் இவர்களை காண, உடனே மீட்புக்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிம் மற்றும் பெல்லா நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் இருவரின் உடல் இயக்கங்கள் சீராக இருப்பதாகவும், அவர்களை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்திருக்கிறார். தனியாக கடலில் பல நாட்கள் இருந்ததால் தற்போது நல்ல உணவும், ஓய்வும் மட்டுமே தான் பெற விரும்புவதாக டிம் கூறியுள்ளார். கடலில் தனித்து வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சிகளில் வல்லுனரான பேரா. மைக் டிப்டன் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-


வைக்கோல்போரில் ஊசியை தேடுவது போன்ற ஒரு அரிய சம்பவம் இது. டிம்மிற்கு அதிர்ஷ்டம் மட்டுமே உதவவில்லை. அவர் திறமையையும், மனோதிடத்தையும் நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீர் வறட்சியால் உடல் பாதிக்காமல் இருக்க உடலிலிருந்து மிகக் குறைந்த அளவே வியர்வை வெளியேறும்படி பார்த்து கொள்ள வேண்டும். பசிபிக் பெருங்கடலில் டிம் சென்ற மிக சிறிய படகை கண்டுபிடிப்பதே கடினம். கிடைப்பதை உண்டு நேர்மறை சிந்தனையோடு இரவில் பெருங்கடலில் தனியாக உயிர் வாழ்வதற்கு கற்பனை செய்ய முடியாத மன உறுதியும் துணிச்சலும் வேண்டும். டிம் மட்டுமன்றி அவரின் நாய் பெல்லாவும் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார். தற்போது டிம் ஷேட்டாக்கையும் பெல்லாவையும் அழைத்து கொண்டு மெக்ஸிகோவிற்கு இழுவை படகு வந்து கொண்டிருக்கிறது. அங்கு வந்ததும் தேவைப்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படலாம்.




நடுக்கடலில் பச்சையாக மீனை சாப்பிட்டு தத்தளித்த இரு உயிர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு