08,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

5,000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு- HCL லிமிடெட் நிறுவனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL லிமிடெட் உடன் தொழிற்நுட்ப துறையை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையில் கலந்துரையாடல் மேற்கொண்டார். 


இந்தக் கலந்துரையாடலின் போது, புதுடெல்லியில் HCL லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையின் 5,000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தியதுடன், ஆளுநரின் முன்மொழிவானது HCL லிமிடெட் நிறுவனம் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது. 

மேலும் , HCL லிமிடெட் நிறுவனமானது இலங்கையில் அவர்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் வழங்கியுள்ளது.


உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான HCL லிமிடெட், இலங்கையில் தமது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. 

ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் விளைவாக, HCL லிமிடெட், முதலீட்டுச் சபையுடன் (BOI) உடன்படிக்கையில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள இலங்கையில் உறுதுணையாகப் பங்காற்றியிருக்கும் (BOI) தலைவர் தினேஷ் வீரக்கொடியின் ஆலோசனையின் பேரில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஆளுநர் செந்தில் தொண்டமானினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முக்கிய முயற்சியானது இலங்கை முழுவதும் 5,000 IT பொறியியலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், இது இலங்கை நாட்டின் வரலாற்றில் IT துறையில் மிகப்பெரிய முதலீடாகவும் அமைந்துள்ளதுடன்,அந்நிய செலாவணியை அதிகரிப்பதில் முக்கிய பங்களிக்கிறது.





5,000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு- HCL லிமிடெட் நிறுவனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு