23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன

இது பாரதூரமான பிரச்சினையாகும். இலவச சுகாதார சேவையின் தற்போதைய பிரச்சினைகள் வழமையானது, சாதாரணமானது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு உணர்வற்ற வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் கருத்துக்களை குறிப்பிடுகிறார்.

சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலவச மருத்துவ துறை மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்துள்ளதா என்பது சந்தேகத்துக்குரியது. 


களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு தேவையான 'எவிமாகென்' என்ற மருந்து இல்லாத காரணத்தால் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அவசர நிலையில் தான் சிசேரியன் சத்திரசிகிச்சை வழங்கப்படுகிறது. மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த சத்திரசிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளது பாரதூரமானது.

நாட்டில் தாய் மற்றும் பிள்ளைகளில் மொத்த எண்ணிக்கையில் 10 இலட்சம் பேர் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என வினவினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு தேவையான மருந்து தட்டுப்பாடு குறித்து உடனடியாக பதிலளிக்க முடியாது.மருந்து கொள்வனவுக்கு தேவையான நிதியை வழங்கியுள்ளோம்.


மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மருந்து கொள்வனவில் பாரிய மோசடி நிலவுகிறது .

தற்போதைய மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் குறிப்பிட்டோம் என விசேட வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உலக சுகாதார தாபனத்தால் அங்கீகரித்த வைத்தியர்களை அரசாங்கம் குறிப்பாக சுகாதாத்துறை அமைச்சு புறக்கணித்துள்ளது என்றார்.


இதன்போது, எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக ஆராய வேண்டும்.

மருந்து கொள்வனவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒதுக்கப்படும் நிதியை கொண்டு தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இயற்கையான முறையில் பிரசவம் நிகழாத போது சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்கப்படும். ஆனால் தற்போது சிசேரியன் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது தாய் மற்றும் சேய் மரணம் நிகழும். இது பாரதூரமானது ஆகவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.


இதன்போது, எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக ஆராய வேண்டும் என குறிப்பிடுகிறோம். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் தற்போதைய பிரச்சினைகள் சாதாரணமானது. இதனால் தான் வைத்தியசாலைகளில் பிரேத அறை காணப்படுகிறது என்கிறார்.

இலவச சுகாதார சேவையில் ஏதேனும் முறைகேடுகள் காணப்படுமாயின் பாதிக்கப்படும் தரப்பினருக்கு நட்டஈடு வழங்கலாம் என்கிறார். உயிரின் பெறுமதியை அவர் எவ்வாறு மதிப்பிடுவார். ஆகவே இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காது என்றார்.


இதன்போது, எழுந்து உரையாற்றிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த காலங்களில் மலேரியா, யானைக்கால் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக இல்லாதொழித்து உலக சுகாதார தாபனத்தின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டோம்.


ஆனால் தற்போது அந்த நோய்கள் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. சுகாதாரத்துறையின் செயற்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இதன்போது, எழுந்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இலவச சுகாதார சேவையின் முறைகேடுகள் தனியார் சுகாதார சேவைக்கு வலு சேர்ப்பதாக காணப்படுகிறது.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை.மாறாக தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு காலத்தை கடத்துகிறது எனக்கூறினார்






களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு