வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் 'மலையகம் 200'ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமானது.
தலைமன்னார், புனித லோரன்ஸ் தேவாலய வளாகத்தில் நடைபவனி புறப்பட தயாராக இருந்தவேளை, ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
அத்தோடு, தலைமன்னாரில் நிறுவப்பட்டிருந்த, மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டு நிறைவின் நினைவுத்தூபிக்கு நடைபவனி பங்கேற்பாளர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நடைபவனி நாளை சனிக்கிழமை (29) 15 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து பேசாலையை அடையும்.
16 நாட்கள் தொடரும் இந்நடைபவனி, இன்று (28) ஆரம்பமாகி, ஆகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையை அடைவதோடு நிறைவுபெறும்.
சக சகோதர பிரஜைகளுடனான ஓர் உரையாடலாக அமையும் இந்த ‘மலையக எழுச்சிப் பயணம்’ மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் சமூக அமைப்புகளை கொண்ட பரந்த குழுவினர், மலையக சமூகத்தை சேர்ந்த - அதனோடு இணைந்து பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..