காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இதுவரையில் மொத்தமாக 21,374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அவற்றிலிருந்து காணாமல்போன முப்படைகளைச்சேர்ந்தோர் பற்றிய 3742 முறைப்பாடுகளையும், ஒரேநபர் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவான 2644 முறைப்பாடுகளையும் கழித்ததன் பின்னரான தேறிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 14,988 ஆகும்.
இத்தேறிய முறைப்பாடுகள் அவை இடம்பெற்ற காலப்பகுதியை அடிப்படையாகக்கொண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் 3 வகையாகப் பிரிக்கப்பட்டன.
அதன்படி 2000 - 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவான சம்பவங்கள், 1981 - 1999 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவான சம்பவங்கள் மற்றும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவான சம்பவங்கள் ஆகியவையே அம்மூன்று வகைப்படுத்தல்களாகும்.
அதன்படி இம்முறைப்பாடுகளில் 3,464 முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் கடந்த 6 மாதகாலப்பகுதியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை 5 இடங்களில் இவ்வாறான பூர்வாங்க விசாரணைகளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்ததுடன் அவ்விசாரணைகளுக்காக மொத்தமாக 188 குடும்பங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
பொலனறுவை - தமன்கடுவ பிரதேச செயலாளர் பிரிவு, இரத்தினபுரி - புதிய நகர பிரதேச செயலாளர் பிரிவு, அநுராதபுரம் - நுவரகம்பலாத்த - கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு, கேகாலை - புதிய நகர பிரதேச செயலாளர் பிரிவு, குருணாகல் - குருணாகல் பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய 5 இடங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பூர்வாங்க விசாரணைகளுக்காக முறையே 69 குடும்பங்கள், 29 குடும்பங்கள், 24 குடும்பங்கள், 15 குடும்பங்கள், 51 குடும்பங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிகோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (28) வடமாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் நீண்ட நாட்களாக எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதியாக இருந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் இப்போது எதற்காகத் திடீரென்று பூர்வாங்க விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது? என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..