அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கும்,பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் பாராளுமன்றத்தில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார். 13 திருத்த அமுலாக்க முயற்சிகள் இறுதியில் முரண்பாடுகளை மாத்திரம் தோற்றுவிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம் பற்றி பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார்.
அரசியலமைப்பு மாற்றம், புதிய சட்ட உருவாக்கம், புதிய நிர்வாக ஒழுங்கு விதிகள் உருவாக்கம், புதிய நிறுவனங்கள் ஸ்தாபித்தல் மற்றும் உறுப்பினர் நியமனம் குறித்து குறிப்பிட்டார்.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
ஆனால் அரசாங்கத்தின் பிரதான அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன 13 ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிர்மறையான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
13 ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி விசேட உரையாற்றியதன் பின்னர் தென்னிலங்கையில் 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன. ஆகவே 13 ஆவது திருத்த அமுலாக்க முயற்சிகள் இறுதியில் முரன்பாடுகளை மாத்திரம் தோற்றுவிக்கும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்ல அச்சமடைந்துள்ளதால் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் இதுவரை முன்னேற்றகரமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதிகார பகிர்வு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள்.
வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கியியலாளர்கள் உட்பட பிரதான தொழிற்றுறையினர் நாட்டை விட்டு செல்வதால் எதிர்காலத்தில் சமூக கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.
மூளைசாலிகள் வெளியேற்றத்தை அரசாங்கத்தால் பலவந்தமான முறையில் தடுக்க முடியாது. தொழிற்றுறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.மாறாக அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.
0 Comments
No Comments Here ..