18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநோயாளி என்று விமர்சித்த வீரசேகரவுக்கு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்-எம்.ஏ. சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநோயாளி என்று விமர்சித்து அவரை தனிப்பட்ட முறையில் கடுமையாக சாடியுள்ளார்.

இது முறையற்றது. நீதிபதிகளின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்த முடியாது.ஆகவே இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செவ்வாய்க்கிழமை (22) பாராளுமன்றத்தில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

நீதிபதியின் மனைவி என்று அவர்களது தனிப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டு நீதிபதியை மனநோயாளி என்று முறையற்ற வகையில் விமர்சித்துள்ளார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 83 ஆவது பிரிவுக்கு அமைய நீதிபதிகளையும்,நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது.பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை போன்று ஒருசில உறுப்பினர்கள் தமது உரையின் போது நீதிபதியின் பெயரை சுட்டிக்காட்டி அவரை விமர்சித்துள்ளார்கள். இவை பாரதூரமானதொரு செயற்பாடாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு முன்னரும் பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிபதியை கடுமையாக விமர்சித்தார்.இவரது கருத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டதுடன், நீதிபதிகள், சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

 அவர் மீண்டும் இவ்வாறு நீதிபதியை விமர்சித்துள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

 

 

 

 





முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநோயாளி என்று விமர்சித்த வீரசேகரவுக்கு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்-எம்.ஏ. சுமந்திரன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு