05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவுள்ளது.


இத்தினத்தன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இறுதிக்கட்ட போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2300 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நீட்சியாக எதிர்வரும் புதன்கிழமையன்று வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அவர்கள், தமது உறவுகளுக்கான நீதி நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்தி இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.



அதேபோன்று உள்ளகப் பொறிமுறையின் மீது தாம் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், நம்பத்தகுந்த சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தும் அதேவேளை, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை உள்ளடக்கி தெற்கில் இயங்கிவரும் அமைப்பான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் 31ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதியமைச்சிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளது. 

அதுமாத்திரமன்றி அன்றைய தினம் மாலை 'காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் காணாமல்போவதற்கு இடமளிக்காதிருப்போம்' என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுகூரல் நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது. 





வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு