கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு சீன பெண்கள் மற்றும் இலங்கையர் ஒருவர் தொடர்பான பரிசோதனை மாதிரி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் அவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என தெரிய வந்துள்ளதான தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 8 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சீன பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீனாவின் வூஹான் பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமானமொன்றை தரையிறக்க, விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சீன அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சின் செயலாளர் ரவினாந்த் ஆரிய சிங்க விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் ஹூபேய் மாகாணத்திலுள்ள சீன நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவுப்படுத்தி அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் சீன பிரஜைகளின் வருகை தொடர்பில் இலங்கை வாழ் மக்கள் அச்சமடைய மாட்டார்கள் என நம்புவதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
வூஹான் நகருக்கு நுழைவது மற்றும் நகரிலிருந்து வெளியேறுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதோடு அங்கு வசிக்கும் மக்கள் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு பயணிக்க முடியாதெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட 43 வயதுடைய சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்குவதற்கு தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதுவரை அவரின் உடல் நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரின் உடல் நிலையை தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீன பெண் குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக அந்த மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக தெரிய வருகின்றது.
இதேவேளை சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தொடர்பான பின்னணியை அறிந்து கொள்ள மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக நாட்டிற்கு வருவதை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வானூர்தி தளம் மற்றும் வானுர்தி சேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் வேறாக வெளியேறும் பாதையில் அனுப்பப்பட்டு கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்வதற்கு இரண்டு விசேட ஸ்கெனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்குள் அவ்வாறு சந்தேகப்படும் வகையிலான நான்கு அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர்களுக்கு வைரஸ் தொற்று பரவவில்லை எனவும் அவர் சுட்டிக்காடினார்.
இதற்கிடையில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் முதலாவது கொரோனா நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..