கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இன்று முதல் புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
உள்நாட்டில் விமான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுவதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியம் மிக்க நோக்கு என்ற கொள்கை அறிவிப்புக்கு அமைய உள்நாட்டு விமான சேவைகளை விரிவுப்படுத்த உறுதிப்பூண்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மத்தள, கட்டுநாயக்க முதலான விமான நிலையங்களுக்கு இடையே உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
70 யணிகளுடன்; பயணிக்க கூடிய ATR 72 ரக விமானம் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு சனிக்கிழமைகளில் திங்கள், மற்றும் புதன்கிழமைகளிலும் உள்நாட்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ரத்மலானை விமான நிலையத்திலிருந்து காலை 7.30க்கு பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த விமானம் காலை 8.30க்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சென்றடையவுள்ளது.
பின்னர் மீண்டும் முற்பகல் 9.30க்கு அந்த விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரத்மலானை விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறும் நிலையில் அதனை அடிப்படையாக கொண்டு இந்த உள்நாட்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் பயணிக்கும் பயணி ஒருவரிடம் 7ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதற்கமைய கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக பயணி ஒருவரிடம் 15 ஆயிரம் அறிவிடப்படவுள்ளது.
2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமுலில் இருந்த சமாதான உடன்படிக்கை காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும், கொழும்புக்கும் இடையில் உள்நாட்டு விமான சேவைகள் இடம்பெற்றன.
இதன்போது, பயணி ஒருவரிடம் 33 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..