மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்தனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
அதேநேரம் சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் திகதி மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பெண்ணொருவரை காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மீகொடை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரில்லவல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், கத்தி, சட்டை என்பன உணவக அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (17) கைப்பற்றப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்திருந்த உணவகத்தின் உரிமையாளரையும், சந்தேக நபர்களுக்கு தங்குவதற்கு வீட்டை வழங்கிய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 44 வயதுடைய இம்புல்கம மற்றும் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..