உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
சுமார் 25,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1100 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த நோயக்கு மொத்தம் 724 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..