பூமியைப் போலவே வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகமொன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.
சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக மட்டுமே, ‘டெஸ்’ (டி.எஸ்.எஸ்) எனப் பெயரிடப்பட்ட செயற்கைக்கோளை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி விண்ணுக்கு அனுப்பியது. விண்ணில் புதிய கிரகங்கள், பூமியைப் போலவே வாழ்வதற்கான தகுதியான கிரகங்கள் உள்ளனவா என்பது குறித்து டெஸ் செயற்கைக்கோள் ஆய்வு செய்து வருகிறது.இந்நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகம் ஒன்றை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. இது பூமியின் அளவை ஒத்துள்ளதாகவும், இக்கிரகம் பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகவும் நாசா தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. நாசாவின் ஜெட் ஆய்வகத்தின் வருடாந்த கூட்டம் அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்தது.அதில், நாசாவின் வானியற்பியல் பிரிவு இயக்குனர் போல் ஹெர்ட்ஸ் இத்தகவலை வெளியிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;
நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பூமி அளவில் உள்ள கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்காக டெஸ் வடிவமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் டெஸ் செயற்கைக்கோள் நட்சத்திரத்தை கிரகம் என்று தவறாக வகைப்படுத்தியது. இதனால், கிரகங்கள் உண்மை தன்மையை விட பெரியதாகவும் வெப்பமாகவும் தெரிந்தன. இந்தப் பிழைகளை டெஸ் திட்ட உறுப்பினர்களுடன் பணிபுரியும் உயர்நிலைப் பாடசாலை மாணவர் அல்டன் ஸ்பென்சர் உட்பட பல வானியலாளர்கள் அடையாளம் கண்டனர்.இந்நிலையில், நட்சத்திரங்கள் இருக்கும் பால்வெளி எல்லைக்குள் பூமியை போலவே அளவுள்ள கிரகத்தை டெஸ் கண்டுபிடித்துள்ளது. இதற்கு ‘டாய் 700டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகத்தின் சில இடங்களில் திரவ நிலையில் நீர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. டாய் 700 டி கிரகம் பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்றார்.
டெஸ் கண்டுபிடித்த புதிய கிரகம், ஸ்பிட்சர் தொலைநோக்கி மூலம் உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்னர் இதே போன்ற வேறு சில கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருள்கள் – கிரகங்கள் – நட்சத்திரங்களுக்கு முன்னால் செல்கிறதா என்பதைக் கண்டறிய வானத்தின் ஒரு பகுதியில் டெஸ் நிலைப்படுத்துகிறது.இது நட்சத்திரங்களின் ஒளியில் தற்காலிக வீழ்ச்சியை ஏற்படுத்தி கிரகத்தின் இருப்பையும், அதன் அளவு மற்றும் சுற்றுப்பாதையையும் அளவிடுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட டாய் 700டி மிகவும் சிறியது. இது சூரியனின் அளவின் 40 சதவீதம் உள்ளது. மேலும் பாதி வெப்பமே கொண்டுள்ளது.
டெஸ் செயற்கைக்கோளானது, டாய் வரிசையில் ஏ, பி, டி என்ற 3 கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. “டி” மட்டுமே வாழக்கூடிய மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகம் சூரியனிடமிருந்து பூமி பெறும் ஆற்றலில் 86 சதவீதத்தைப் பெறுகிறது. இதன் வளிமண்டல அமைப்பு மற்றும் மேற்பரப்பு வெப்ப நிலையை கணிக்க ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திரத்தின் அளவு மற்றும் வகையின் அடிப்படையில் மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். இந்தக் கிரகம் நட்சத்திரத்துடன் பூட்டப்பட்டுள்ளது.அதாவது சந்திரன் மற்றும் பூமியைப் போலவே ஒரு பக்கம் எப்போதும் நட்சத்திரத்தை எதிர்கொள்கிறது. அதேபோல், ஒரு பக்கம் தொடர்ந்து மேகங்களால் மூடப்பட்டுள்ளது. அங்கு கிரகத்தின் இருண்ட பக்கத்தில் இருந்து காற்று அதன் ஒளியை நோக்கி வீசுகிறது. நாசாவின் மாதிரிகளில் ஒன்றோடு பொருந்தக் கூடிய புதிய தரவைப் பெறுவதற்காக, பல வானியலாளர்கள் கிரகத்தை மற்ற கருவிகளுடன் கண்காணிப்பார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..