குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு, கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் ஓமனின் மஸ்கட்டிலிருந்து UL-208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தார். இலங்கை வந்த அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ந நிலையில் அவரைக் கைது செய்தனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்-27 ரக விமான கொள்வனவின் போது இடம்பெற்ற சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பாக உதயங்க வீரதுங்க சந்தேகநபராக பெயரிடப்பட்டு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி அப்போதைய கோட்டை நீதிவானாக இருந்த லங்கா ஜயரத்ன குற்றவியல் சட்டத்தின் 63 (1) ‘அ’ பிரிவின் கீழ் உதயங்க வீரதுங்கவை, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்வதற்கான சிவப்பு அறிவித்தல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று இலங்கை வந்தடைந்த போது விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டு நீதின்றத்தில் ஆஜர்படுத்தையடுத்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..