20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ஜெனிவாவில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதை மீளப் பெற கோரிக்கை

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 30 கீழ் 1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கும் தீர்மானத்தை இலங்கை மீளப் பெற வேண்டும் என தேசிய ஒன்றிணைந்த குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, ஜெனீவாவில் இடம்பெறவுள்ள அடுத்த மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய ஒன்றிணைந்த குழுவின் துணைத் தலைவர் அனில் அமரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கை இவ்வாறு இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றமை ஆயுதப் படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான 30 கீழ் 1 தீர்மானத்துக்கு 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் இணை அனுசரனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பெரும்பாண்மையான வாக்குளினால் வெற்றி பெற்றதாகவும், இதனால் இந்த சந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30 கீழ் 1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கும் தீர்மானத்தை இலங்கை மீளப் பெற வேண்டும் எனவும் தேசிய ஒன்றிணைந்த குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய, 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது.

இந்த நிலையில், இலங்கையில் போரின் போது நடைபெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறல்களுக்கும் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும் எனவும், நல்லிணக்கம் கட்டி எழுப்பபடவேண்டும் என்பவற்றை இலங்கை அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த விடயங்களை தாம் மேற்கொள்வதாக கடந்த அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.


2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேலும் 2 வருடங்கள் கால அவகாசம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானியாவின் தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய, கடந்த ஒரு வருட காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் இம்முறை மாநாட்டில் விடயங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையிலேயே, 30 கீழ் 1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கும் தீர்மானத்தை இலங்கை மீளப் பெற வேண்டும் என தேசிய ஒன்றிணைந்த குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




ஜெனிவாவில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதை மீளப் பெற கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு