எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான சட்டபூர்வ அறிக்கை நாளை (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையினை தீர்ப்பதற்கு அறிக்கை ஒன்றினை தயாரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் சட்ட வல்லுனர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கூட்டணியில் இணைந்துள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிவருகின்றனர்.
அதேவேளை, யானை அல்லது இதயம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த மூன்று சின்னங்களிலும் போட்டியிடுவதில் சிக்கல் நிலை உருவானால் வேறு ஒரு புதிய சின்னம் ஒன்றில் களமிறங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்துள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.
எனவே 25 வருடங்கள் பழமையான தமது கட்சியின் சின்னத்தை நீக்கி, கட்சியின் சின்னமான அன்னப்பறவை சின்னத்தை வேறு பெயரில் பதிவு செய்யப்படவுள்ள கட்சிக்கு வழங்க ஒருபோதும் இணக்கம் வெளியிடப்பட மாட்டாது என புதிய ஜனநாயக முன்னணியின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் கூட்டணி தொடர்பாக தற்போது எழுந்துள்ள சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் சட்டவல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட சட்டபூர்வ அறிக்கை நாளைய தினம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..