மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக, இலங்கை சார்பான விசேட பிரதிநிதி முன்வைத்த பதில் அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரின் விசேட கலந்துரையாடல் அமர்வில் (Interactive Dialogue) இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சார்பாக குறித்த அமர்வில் கலந்து கொண்ட விசேட பிரதிநிதி இந்த விடயத்தை தெரிவித்தார்.
கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்க இலங்கை பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை என விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பான முழுமையான விளக்கங்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பின்னரும் இந்த விடயங்கள் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் செயற்படக்கூடிய நம்பகமான கட்டமைப்பை இலங்கை அரசு கொண்டுள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின் படி, அதன் அனைத்து மக்களின் சிந்திப்பதற்கான சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்தை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இலங்கை உறுதியுடன் உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட அறிக்கையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன், ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..