நேற்று முன்தினம் (மார்ச்14) வரை 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொகையானது நேற்றிரவு (மார்ச்15) ஆகும் போது 18 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று (மார்ச் 15) காலை அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று மாலை புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியிலிருந்து வருகைத் தந்து, பொலன்னறுவை - கந்தகாடு தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட வந்த 7 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த 7 பேரும் பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்கள் அனைவரும் கடந்த 10ஆம் தேதி முதல் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையங்களுக்கு 14 நாட்கள் கண்காணிப்புக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிலையங்களில் சுமார் 1700 பேர் வரை தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 133 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.













0 Comments
No Comments Here ..