கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அந்த அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை அமெரிக்கா நிறுத்துவதாக அந்நாட்டின் அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவரது அறிவிப்புக்கு எதிர்மறையான கருத்துக்கள் சில உலக தலைவர்களிடம் இருந்து வந்துள்ளது
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொது செயலர் அன்டோன்யு குட்டாரெஸ், ‘’இந்த நோய்த்தொற்று எப்படி தொடங்கியது, எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது போன்றவற்றை புரிந்துகொள்ள, அலசி ஆராய ஒரு நேரம் வரும். அதற்கான நேரமும், சமயமும் இது அல்ல. உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் நிதியை நிறுத்துவதற்கும் இது சரியான நேரம் அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், ‘’தற்போதைய நிலையில் உலகத்துக்கு தேவையான பல முக்கிய தகவல்களை அளித்து வரும் உலக சுகாதார அமைப்பை நாம் தொடர்ந்து ஆதரிப்போம்’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்கள் கமிட்டியின் தலைவரான இலியாட் கருத்து தெரிவிக்கையில், ‘’ஒவ்வொரு நாளும் நிலைமை மிகவும் மோசமாகி வரும் சூழலில், தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்களை, உலக சுகாதார அமைப்பை, சீனாவை என அனைத்து தரப்புகள் மீதும் குற்றம்சுமத்தும் தனது அரசியலை விளையாட்டை டிரம்ப் நடத்தி வருகிறார்’’ என விமர்சனம் செய்துள்ளார்.
0 Comments
No Comments Here ..