21,Nov 2024 (Thu)
  
CH
தொழில்நுட்பம்

அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது?

தொழில்நுட்பம் என்பது அறிவியல் முறையையும், பொறியியல் கருவிகளையும் பயன்படுத்தி நுணுக்கமான வேலைகள் மூலம் திட்டங்களையும், வரையீடுகளையும் செயற்படுத்துவது தொழில் நுட்பமாகும். அதாவது விஞ்ஞான அறிவு முறைகளையும், பொறியியல் ரீதியான இயந்திரங்களையும் கொண்டு நுணுக்கமாக வேலைகளை மேற்கொள்ளுவதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இவை தொழிற்சாலைகளின் செயன்முறைகளில் முழுமையாக அறிவாற்றலைப் பயன்படுத்தும் செயற்பாடுகளைக் கொண்டதாகும். தொழில்நுட்பமானது அறிவியல் துறைகளுடனும், பொறியியல் துறைகளுடனும் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டு காணப்படுகின்றது.

 அத்துடன் தொழில்நுட்பமானது கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவற்றைப் பயன்படுத்துவோர் எவ்வாறு சூழலைக் கட்டுப்படுத்தவும், இயைந்து வாழவும் கூடிய தகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கிய கருவியமைப்பின் தொகுப்பே தொழில்நுட்பம் எனப்பலர் குறிப்பிட்டாலும், அதற்கான அறிதியானதும் , உறுதியானதுமான வரையறைகளை முன்வைக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

 தொழில்நுட்பமானது வளங்களினதும், விழுமியங்களினதும் பாவனை தொடர்பான ஓர் வடிவமாகவே உள்ளது. இது அனைத்து மனித சமூகத்திலும் காணப்படுகின்றது. அதாவது ஆரம்ப கால சமூகத்தில் அவர்களது அறிவு, திறன் முதலானவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாகத் தொழில்நுட்ப ரீதியான சிந்தனைகள் உருவாக்கம் பெற்றன. இவை ஆரம்பகால சமூகம் முதற்கொண்டு தற்கால சமூகமான நவீன சமூகம் வரையும், பரந்தளவில் சேவையை நல்குவதாகக் காணப்படுகின்றது.

 அந்தவகையில் தொழில்நுட்பமானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற சாதகமான தாக்கங்கள் பற்றி நோக்குகின்ற போது தொழில் நுட்பங்கள் மனிதர்களினுடைய வேலைப்பழுவைக் குறைத்துவிட்ட நிலையை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால் பசுமைப்புரட்சியின் விளைவினால் இயந்திர வழு பயன்படுத்தப்பட்டு மக்களுக்குத் தேவையான உற்பத்தப் பொருட்கள் குறைந்த நேரத்தில் அதிகளவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. இதனால் மனிதர்களினுடைய தேவைகள் உடனுக்குடன் நிறைவு செய்யக்கூடிய நிலைமையில் காணப்படுகின்றது. அத்துடன் நவீனத்துவத்தின் தோற்றத்தினால் பாரம்பரியத் தொழில்களிலிருந்து விடுபட்டு இலத்திரனியல் சார் தொழில்களில் மனிதர்கள் ஈடுபடுவதனால் உயர்ந்த ஊதியம் கிடைக்கின்றது. அதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றது. அத்துடன் நேரவிரயங்கள் தொழில்நுட்ப விருத்தியினால் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த காரணமாகின்றன. ஆகவேதான் தொழில்நுட்பமானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதனை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

 அதுமட்டுமல்லாமல் தொழில் நுட்பங்களினால் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ளன. உலகமயமாதல் செயன்முறை மூலமாக உலகம் சுருங்கிவிட்ட நிலைமை காணப்படுகின்றது. உடனுக் குடன் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் இலகுவாக அமைகின்றது. அதுமட்டுமல்லாமல் மின்வணிகம் மூலமாக உடனுக்குடன் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதும், இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவை போன்ற செயற்பாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாகவே கிடைக்கப் பெற்றன. ஆகவே இவை மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றமையை எடுத்துரைக்கின்றன.

அத்துடன் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டு வருகின்ற முன்னேற்றங் காரணமாக சமூகநலத்திட்டங்களில் வளர்ச்சி நிலமை காணப்படுகின்றது. அதாவது கல்வியை எடுத்துக் கொண்டால் இலத்திரனியல் கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது Information technology தொடர்பான பாடத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக புத்தகங்களிற்குப் பதிலாக கணினிகளைக் கொண்டு செல்லும் நிலைமை காணப்படுகின்றது. அத்துடன் இணையத்தளங்கள் மூலமாக தகவல்கள் திரட்டப்படுகின்றன. இவை போன்ற பல்வேறு செயற்பாடுகள் கல்வியில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பல்வேறு நன்மைகளை அடைய ஏதுவாக அமைகின்றது. இவை தொழில் நுட்பத்தினுடைய சாதகமான தாக்கமே ஆகும்.

அதுமட்டுமல்லாமல் தொழில் நுட்பத்தின் காரணமாக சுகாதார நலன்களிலும் வளர்ச்சி நிலைமை காணப்படுகின்றது. அதாவது புதிய வகை மருந்துக்களின் கண்டுபிடிப்புக்கள், புதிய மருத்துவக் கருவிகளின் பயன்பாடு முதலானவை தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக புற்று நோய்களுக்கான மருந்துப் பொருட்களின் பாவனைகள், அறுவைச் சிகிச்சைகள் முதலானவை மனிதர்களினுடைய ஆயுள் எதிர்பாப்புக்களை உயர்வடையச் செய்கின்றன. இவ்வாறான நிலமைகள் தொழில் நுட்பத்தின் மூலமாக மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட சாதகமான தாக்கங்களேயாகும். 

அதுமட்டுமல்லாமல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதர்களினுடைய அடிப்படைத் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்யக்கூடிய நிலமை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதாவது உணவு பற்றி நோக்குகின்ற போது மனிதர்களினுடைய அவசரகால வாழ்கையில் நேரத்தை வீண்விரயமாக்காமல் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அதாவது துரித உணவுகள் குறைந்த விலையில் காணப்படுவதுடன், புத்துணர்ச்சியைத் தருவதாகவும் காணப்படும். அதுமட்டுமன்றி தனித்து வீடுகளில் வசிப்போருக்கு இது இலகுவானதாகக் காணப்படும். அத்துடன் கடின உழைப்புக்களின் மத்தியில் இலகுவான ஒன்றாகக் காணப்படுவதனால் பெரும்பாலான மக்கள் இவற்றைத் தெரிவு செய்கின்றனர். இவ்வாறான உணவு ரீதியான தொழில் நுட்ப வளர்ச்சியானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கங்களையே ஏற்படுத்துகின்றது.

 அதுமட்டுமல்லாமல் போக்குவரத்துத் தொடர்பாக நோக்குகின்ற போது குறித்த சில மணிநேரத்திற்குள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் செல்வதற்கான தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அதாவது தரை, நீர், வான் போக்குவரத்துக்கள் மூலமாக பயணிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்தக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக விமானங்கள், கப்பல்கள், மின்சார ரையில்கள் முதலான சாதனங்கள் மனிதர்களினுடைய போக்குவரத்துத் தேவைகளை துரித கதியில் மேற்கொள்வதற்கு உதவுகின்றன. இவ்வாறான தொழில்நுட்பங்கள் மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அடுத்து மக்களை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு செல்கின்ற மின்சாரம் தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சியானது முன்னேற்றப்பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதாவது அதிகரித்துச் செல்லும் சனத்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அந்தடிப்படையில் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதுடன் அதற்கு இணையான அனல்மின் உற்பத்திகளும் அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டாக இலங்கையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தைக் குறிப்பிடலாம். இவை குறைந்த விலையில் அதிக மக்களுக்கான மின்சாரத் தேவையை நிறைவு செய்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கின்ற தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக ஜப்பான், அமெரிக்கா முதலான வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான முறைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படடு மக்கள் பாவனைக்கு விடப்படுகின்றது. இவ்வாறான தொழில் நுட்ப வளர்ச்சியானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கங்களையே ஏற்படுத்தி வருகின்றது.

 அத்துடன் இயற்கையாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்வு கூறக்கூடிய தொழில் நுட்பங்கள் இன்று வளர்ச்சியடைந்துள்ளன. அதாவது புவிநடுக்கங்கள், சுனாமி, சூறாவளிகள் மற்றும் வெள்ளப் பெருக்குகள் முதலான அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வசதிகள் வளர்ச்சியடைந்துள்ளன. உதாரணமாக புவிநடுக்கங்களை அளவிடுகின்ற தொழில் நுட்பங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை மையங்கள் முதலானவை மக்களுக்கான சேவையை வழங்குகின்றன. பசுபிக் கடற்பிராந்தியத்தில் காணப்படுகின்ற சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து அதனுடைய அங்கத்துவ நாடுகளுக்கு உடனடியாகத் தகவல்கள் வழங்கப்படுகின்றன. இவற்றினைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் நகர ஏதுவாக அமைகின்றது. இவ்வாறான தொழில் நுட்பங்கள் மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கைக்கு சாதகமான தாக்கங்களையே ஏற்படுத்துகின்றன.

இவ்வாறாக தொழில் நுட்பங்கள் மகிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்து மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தினால் ஏற்படுகின்ற பாதகமான தாக்கங்கள் தொடர்பாக நோக்குகின்ற போது தொழில்நுட்பங்கள் மானுட நலனுக்காக மட்டும் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படவில்லை. மானுட அழிவிற்கான ஆரம்பமாகவே தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தொழில் நுட்பத்தின் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. அதாவது அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைப்பற்றி நோக்குகின்ற போது உணவுகளின் தன்மைகளிலும்;, தயாரிப்பு முறைகளிலும் பல்வேறு இரசாயனப் பதார்த்தங்களின் சேர்க்கை காணப்படுகின்றது. மனிதருடைய அவசர கதி வாழ்க்கையில் துரித உணவு (fast food) என்பதன் பங்கு அதிகமாகவே காணப்படுகின்றது. இவை மனிதனின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அதேவேளை அதனால் பல்வேறு பாதகமான விளைவுகளும் ஏற்பட ஏதுவாக அமைகிறது. இவ்வுணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள் பெரும்பாலும் அதனுள் உள்ளடக்கப்பட்டுள்ள பதார்த்தங்கள் தொடர்பாக கவனிக்காமையானது பல்வேறு உடலியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக எண்ணை, கொழுப்பு, சீனி மற்றும் அமிலப்பதார்த்த சேர்க்கை, அஜின மோட்டோவின் சேர்க்கை போன்றவை மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக இருப்பதனால் மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மனிதர்களை ஓர் நலிவு நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றது. அதாவது உடற்பருமன் அதிகரிப்பு, நோய்கிருமிகளின் தொற்று முதலானவை ஏற்பட ஏதுவாக அமைகின்றது. இவ்வாறான தொழில்நுட்பத்தினால் மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக்காரணமாக அமைகின்றது. 

 அத்துடன் சனத்தொகை வெடிப்பு காரணமாக பசுமைப்புரட்சி எனும் தொழில் நுட்பமானது விவசாயத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. துரித சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப உணவை வழங்கவேண்டிய நிலையில், சிறிய நிலத்தினைப்பயன்படுத்தி அதிக உற்பத்திப் பொருட்களைப் பெற வேண்டும் எனும் நிலமையும் காணப்படுகின்றது. அதனடிப்படையில் உயர் உற்பத்தியைப் பெறவேண்டும் என்பதற்காக பயிர்களுக்கு களைக்கொல்லிகள், கிருமி நாசினிகள், உரங்கள் முதலானவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிலமை காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தொழில்நுட்பம் அவசியமாகிறது. அவ்வடிப்படையில்தான் இயந்திரங்கள், விமானங்கள் போன்ற கருவிகள் பயன்படுத்தப் படுகின்றது. இவை மனித சமூகத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக ஜப்பான், ஜக்கிய அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றது. அதாவது கிருமி நாசினிகளைப் பயிர்களுக்கு தெளிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் அதன் செறிவு பரவலடைந்து செல்வதனால் அச்சூழல் தொகுதியில் வாழுகின்ற பல்வேறு வகையான உயிரினங்கள் ஆபத்துக்கு உள்ளாவதுடன், அவ்வாறான ஆபத்துக்கள் உணவுச்சங்கிலி, உணவு வலைகளில் ஆபத்துக்களை ஏற்படுத்துவதனால் மனிதருக்கான உணவுகளில் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது. ஆகவே இவை மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையை பாதிப்படையச் செய்கின்றன.

 அடுத்து மனிதனின் அடிப்படைத் தேவையான உறையுள் என்பதை நோக்குகின்ற போது சனத்தெகை அதிகரிப்பிற்கு ஏற்ப நிலவளங்கள் அதிகரிப்பதில்லை என்பது முக்கிய விடயமாகும். அந்தவகையில் மக்கள் தமக்கு உகந்த வாழிடங்களை அமைத்துக் கொள்வதற்காக காடுகளைத் துரிதமாக அழிக்கின்றனர். மரங்களை வெட்டுவதற்காக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அக்கருவிகள் முழுமையான காடழிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது வெட்டுக்கருவிகள் மரங்களை துரித கதியில் அழிப்பதுடன், மற்றைய மரங்களையும் சேதப்படுத்துகின்றன. இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதனால் ஆவியுயிர்ப்புக்கள் மந்த கதியில் இடம்பெறுகின்றன. காபனீர் ஒட்சைட், மேதேன் வாயுக்கள் அதிகரிக்கின்றன. அதனால் வாயுக்கட்டமைப்பில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இவ்வாயுக்கட்டமைப்பில் ஏற்படுகின்ற மாறுபாட்டினால் புவியில் வெப்பம் அதிகரிக்கின்றது. புவிக்கு நன்மையளிக்கும் ஓசோன் படையில் ஒவ்வாத வாயுக்களின் சஞ்சரிப்பினால் (மேதேன் , குளோரோ புளோரோ காபன்) ஓசோன் படை சிதைவிற்கு உள்ளாகின்றது. இவ்வாறான நிலமையினால் பூகோளம் வெப்பமடைகின்றது. இதனால் முனைவுப்பகுதி பனிமலைகள் உருகுவதுடன் அவை கடலுடன் சங்கமிக்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர்வடைகின்றது. கடல்பரப்பு அதிகரித்து தீவுகளைத் தன்னுடன் இணைத்துக்கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டினால் மனிதர்களினுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்படைகின்றது. ஆகவே இத்தொழில் நுட்பம் மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 அடுத்து மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடை தொடர்பாக நோக்குகின்ற போது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதற்கு முன்பிருந்த ஆரம்பகால சமூகத்தின் உடை வடிவமைப்பானது அச்சூழலுக்கு ஒத்த அல்லது இயைந்து செல்லக்கூடிய அமைப்பை ஒத்திருந்தன. ஆனால் நவீன சமூகத்தில் தொழில்நுட்ப விருத்தி காரணமாக உடலுக்கு ஒவ்வாத அல்லது உகந்தமற்ற தெரிவுகள் இடம்பெறுகின்றன. இவை பருவகாலங்களுக்கு ஒவ்வாதனவாகவே காணப்படுகின்றன. அவை மனிதருக்கு அசௌகரியமாக இருப்பினும் அவற்றை அணிகின்ற நிலமையே காணப்படுகின்றது. இவ்வாறான தொழில்நுட்ப விருத்தியானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகின்றது.


 அடுத்து மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற தொழில் நுட்பமானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. அதாவது மனிதர்களது நோயைக் குணப்படுத்துவதற்கு வழங்கப்படுகின்ற மருந்துப் பொருட்கள் , கருவிகள் முதலானவை மக்களது அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக ( Analgin – pain killer , Furazolidone- cancer , Nimesulide- fever, liver failure) இவ்வாறான மருந்துகள் நோயாளிகளைப் பாதிப்பதாக அமைகின்றது. இவ்வாறான தொழில்நுட்ப விருத்தியானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.


 அடுத்து போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள்; மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. அதாவது சனத்தொகையின் துரித அதிகரிப்பினால் அவர்களுக்கான போக்குவரத்துத் தேவைகளும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. மக்கள் அவர்களது பிரயாணத்திற்காகப் பயன்படுத்துகின்ற தரைவழிப் போக்குவரத்துச் சாதனங்கள், நீர்வழிப் போக்குவரத்துச் சாதனங்கள், வான்வெளிப் போக்குவரத்துச் சாதனங்கள் சூழலைப் பெரிதும் பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அந்தவகையில் தரைவழிப் போக்குவரத்துச் சாதனங்களின் அதிகரித்த பெருக்கத்தினால் வெளியிடப்படுகின்ற வாயுக்கள் சூழலில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அதாவது வாகனங்கள் பொதுவாக வெளியேற்றும் காபன் முதலான வாயுக்கள் சூழலில் செறிவடைந்து காணப்படுவதுடன், மனிதர்களினுடைய சுவாசத்திலும் பாதிப்பை ஏற்படுத்தகின்றது. அத்துடன் வாகன நெரிசல்களினாலும் மக்கள் பாதிப்படைகின்றனர். இவ்வாறான தொழில் நுட்பங்கள் மனிதர்களினுடைய இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


 அடுத்து நீர்வழிப் போக்குவரத்து சாதனங்களினுடைய தொழில்நுட்பமானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களையே ஏற்படுத்தி வருகின்றது. அதாவது கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்கள் சமூத்திர சூழல் தொகுதியைப் பாதிக்கின்றது. கடலில் பயணிக்கும் கப்பல்கள் வெளியேற்றும் கழிவுகள் நீருடன் கலத்தல், மற்றும் எண்ணைக்கப்பல்கள் சமூத்திரத்தில் முழ்குதல், ஆழ்கடல் பகுதியில் காணப்படும் டெரிக் கோபுரங்களினால் எண்ணைக்கசிவுகள் ஏற்படல் முதலானவை மனிதர்களினுடைய அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது சமூத்திரங்களில் பயணிக்கும் எண்ணைக்கப்பல்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக நீரினுள் மூழ்குகின்றன. உதாரணமாக 1989இல் அலாஸ்காக் கரையோரத்தில் எச்சென், வாஸ்டெஸ் எனும் எண்ணைக்கப்பல்கள் விபத்துக்குள்ளானதால் 10 Million கலன் பெற்றோலியம் அலாஸ்கா முழுவதும் பரவியது. இதனால் பல உயிர்களுக்கு அழிவுகள் ஏற்பட்டதுடன் ஜதரோக்காபன் கடல் நீருடன் கலந்தமையினால் உணவுச்சங்கிலி பாழாகிப் போனது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்களுக்கு உள்ளாகினர். இவ்வாறான நிலமைகளானது தொழில் நுட்பத்தினுடைய உச்ச பயன்பாட்டினால் மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பாரிய தாக்கத்தினையே எடுத்தியம்புகின்றது.


 அடுத்து வான்வெளிப் போக்குவரத்துத் தொழில்நுட்பங்காரணமாக மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது அண்டவெளியில் பறக்கும் விமானங்கள் வெளியேற்றுகின்ற வாயுக்கள் மற்றும் அண்டவெளியில் வெடித்துச்சிதறும் விமானங்கள் முதலானவை வளிமண்டல சூழலுக்கு பெரிதும் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அதாவது விமானங்கள் வெளியேற்றகின்ற காபன்டை ஒக்சைட்டுக்கள், நைரஜன் ஒட்சைட்டுக்கள் முதலானவை வளிமண்டல வாயுக்கட்டமைப்பினை சீர்குலைய வைக்கின்றன. அதாவது இவ்வாறான செயற்பாடுகளிளால் சுமார் 3.5மூ மான வாயுக்கள் வளிமண்டலத்தில் இணைந்து கொள்கின்றன. இதனால் காலநிலை மாற்றங்கள் நிகழுகின்றன. அதாவது காலந்தாழ்த்திய மழை, அமில மழை மற்றும் தோற்புற்று நோய்கள்; முதான பல்வேறு பாதிப்புக்கள் மனித சமூகத்திற்கு ஏற்படுகின்றது. இவ்வாறான தொழில்நுட்பங்கள் மனிதர்களினுடைய அன்றாட இயல்பு வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களையே ஏற்படுத்தி வருகின்றன.


 தொழில் நுட்பக்கண்டுபிடிப்புக்கள் மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களையே ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பாதுகாப்பு எனும் விடயத்தைக் குறிப்பிட முடியும். அதாவது ஒரு நாட்டினை பகையாளிகளிடமிருந்து பாதுகாப்பதானது இன்றைய சூழலில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதாவது தனிமனிதர்களைப் பாதுகாத்தல் மற்றும் இனக்குழுக்களைப் பாதுகாத்தல், நாட்டின் வளங்களைப் பாதுகாத்தல் முதலானவை இங்கு முக்கியமானவையாகும். இவற்றைப் பாதுகாப்பதற்கு தொழில்நுட்பம் தேவைப்படுகின்றது. இவை பெரிதும் அழிவுகளுடன் தொடர்புடையவகையாகக் காணப்படுகின்றன. அதாவது நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவ ஒத்துழைப்புகளும், ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக யுத்த நடவடிக்கைகளுக்கு அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாம் உலக மகாயுத்த காலப்பகுதியில் (1945) ஜக்கிய அமெரிக்காவினால் ஜப்பானுக்கு அணுகுண்டு போடப்பட்டது. இந்த அணுகுண்டினுடைய வீரியம் இன்றும் ஓய்வடையாத நிலையில் காணப்படுகின்றது. தற்காலத்ததிலும் ஹிரோசிமா , நாகசாகி பகுதியில் பிறக்கின்ற குழந்தைகள் ஊனமுற்ற நிலையில் பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமின்றி நச்சுவாயுக்கள் பயன்படுத்துவதும், ஊடரளவநச குண்டுகள் பயன்படுத்துதல் முதலானவையும் யுத்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையும், அதனால் பல்லாயிரக்னக்கான மனித உயிர்கள் அழிக்கப்பட்டு வருவதுடன், ஊனமுற்றவர்களாக உருவாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கவையாகும். இவ்வாறான தொழில் நுட்ப முன்னேற்றங்களானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையினுடைய இருப்பை பாதிப்பதாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


 அடுத்து தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தகவல் தொடர்பாடல் துறை பெருவளர்ச்சி அடைந்திருந்தாலும் அதன் மூலமாக மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் கடுமையான பாதக விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றது. அதாவது இணையத்தளங்களுக்கு அடிமையாதல், பிறழ்வான நடத்தைகளை மேற்கொள்ளத் துண்டுதலை வழங்குதல், கதிர்வீச்சுக்களினால் மனிதர்களினுடைய மூளை, காதுகள், கண்கள் பாதிப்படைதல் முதலான பல்வேறு பாதிப்புக்கள் மனிதர்களுடைய இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக செலுலர் தொலைபேசிகளை அதிகமாகப் பயன்படுத்துவதினால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் தகவல்களினுடைய உண்மைத்தன்மைகள் இழந்து போகின்ற நிலமைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலமைகள் தொழில்நுட்பம் மூலமாக மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதனை எடுத்துக்காட்டுகின்றன.


 அடுத்து தொழில்நுட்பங்களினுடைய அதிகரித்த ஆக்கிரமிப்பின் காரணமாக மனிதர்களினுடைய வேலை நேரங்கள் குறைக்கப்படுகின்றன. அதனால் மனிதர்கள் தனிமையில் காணப்படுவதுடன் தீயபழக்கவழக்கங்களுக்கு உட்படுவதற்கு துண்டுதலாக அமைகின்றன. அதாவது போதை வஸ்துக்களைப் பாவித்தல், சீட்டாட்டம், சூதாட்டங்களுக்கு அடிமையாதமல் முதலான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அமைகின்றன. அதனால் குடும்ப சூழ்நிலைகள் பாதிக்கப்படுவதுடன் சமூக ரீதியாக அந்நியமாதலுக்கு உட்படவும் காரணமாக அமைகின்றது. இவ்வாறான தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட முடிகின்றது.


 தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதர்களினுடைய வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதவது ஆரம்ப காலங்களில் காணப்பட்ட கூட்டுக்குடும்ப மரபுகள் மாற்றமடைந்து தனிக்குடும்ப மரபுகள் வளர்ச்சியடைந்து வருகின்றமையானது மனிதர்களினுடைய குடும்பக்கட்டமைப்பில் ஏற்பட்டுவருகின்ற பாதகமான தாக்கமே ஆகும். அதாவது சுயம் சார்ந்த சிந்தனைப் பெருக்கங்கள் அதிகரித்து வருகின்றமையும் இதனாலேயாகும்.


 ஆகவே தொழில்நுட்பத்தின் மூலமாக மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் குறைந்த நேரத்தில் கூடிய நலன்களைப் பெற்றுக் கொள்ளவும், விரைவான தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் உதவுகின்றன எனவும் சில பாதகமான தாக்கங்களாக காலநிலை மாற்றங்கள், புதிய நுண்ணுயிர்கள் உருவாக்கப்படல் போன்றனவும் ஏற்படுகின்றன.


 ஆகவே தொழில்நுட்பமானது முழுக்க முழுக்க மனிதர்களுக்கு நன்மையளிப்பதாகவோ அல்லது மானுடர்களின் நலனுக்காகவோ அல்லது மனிதகுல அமைதிக்காகவோ மாத்திரம் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படவில்லை. அவை மனிதகுல அழிவையும், நாடுகளினது வல்லரசுத் தன்னையினை நிலைநிறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவை மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 


Reference


1.      Craig Calhoun, Chris rojek, Bryan turner, (2005), “The sage hand book of sociology” , sage publication , page (546).


2.      Metta Spencer, Alex inkeles, (1931), “foundation of modern sociology” , prentice hall inc , page (64-65).


3.      S.T. Hettige , (1998) , “globalization social change &youth” , German cultural institute.


4.      Simon ramo, (1983), “what is wrong with our technological society” , McGraw hill book company, page(1-10).


5.      Larry ray, ,(2007), “globalization & everyday life” , rout ledge, Taylor &trances’ group.


6.      எம். அனஸ், (2002), “ சமூக விஞ்ஞான மன்றம்” , பக்கம்(19-21).


7.      ஆர். பிரபாகரன் ,(2005), “புவியருவி” , புவியியற் சங்கம், புவியியற் துறை, கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை, பக்கம்(172).


8.      Www.buzzle.com ,1.44pm ,31.05.2012.


9.      Http//www.wikipedia.org , 1.50, 31.05.2012


- பிருந்தா.யோகராசா, சமூகவியல் கற்கை, கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை.




அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு