02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீட்டரில் உருவாகும் ஆபத்து!! சீனாவின் கனவுத் திட்டம் - இந்தியாவிற்கு பேராபத்து

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ எச்சரித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருப்பது என்பது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்தானதாக மாறி வருகிறது.

ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் இலங்கையின் தென் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு அளித்து இருக்கின்றது.

மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி கொண்டதாகும். இதில் 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்களும் அடங்கும். இந்தத் துறைமுகம் அந்த மார்க்கமாகச் செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைக்கக்கூடியது. இதனால் எரிபொருள் தேவையும் கணிசமாகக் குறையும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 மில்லியன் அமெரிக்க டொலருக்கு சீன நாடு இலங்கையிடம் இருந்து குத்தகைக்குப் பெற்று, இந்த மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி, சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 269 ஹெக்டேர் நிலத்தையும் கையகப்படுத்தி சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

சீனாவின் கனவுத் திட்டமான சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள வீதிகளையும், துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை' திட்டத்திற்கு முக்கியத் துறைமுகமாக இருக்கும் என்பதால், இதன் மூலம் சீனாவின் இராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் சூழல் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியைக் கைப்பற்றிக் கொள்வதும், அங்கே இராணுவத் துருப்புகளை நிறுத்தவும் துணிந்தால் தமிழ்நாட்டிற்கும் கேடு விளையும். எனவே ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீட்டரில் உருவாகும் ஆபத்து!! சீனாவின் கனவுத் திட்டம் - இந்தியாவிற்கு பேராபத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு