கொழும்பை தவிர வேறு பகுதிகளில் இது வரையில் டெல்டா வைரஸ் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான புத்தாண்டு கொத்தணியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை ஒரு இலட்சத்து 61 629 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2335 தொற்றாளர்கள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறிருக்க மூன்றாம் அலையில் மாத்திரம் 2511 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கொவிட் செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில்,
கொழும்பு - தெமட்டகொட பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்ட தொற்றாளர்களைத் தொடர்ந்து இதுவரையில் வேறு எந்த பிரதேசத்திலும் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் வேறு ஏதேனும் பகுதிகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் டெல்டா வைரஸ் காணப்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் எந்தெந்த பகுதிகளில் வைரஸ் பரவியுள்ளது என்பதை தனித்தனியாக உறுதி செய்வது நடைமுறை சாத்தியமற்றது.
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே அத்தியாவசியமானது என்றார்
0 Comments
No Comments Here ..