இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 800,000 சிரிஞ் என்ற அகற்றக்கூடிய ஊசிகள், உத்தர பிரதேசத்தில் இருந்து இந்திராகாந்தி சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, போக்குவரத்து இடையூறுக்கு மத்தியிலும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுடில்லிக்கான பாதை போக்குவரத்து மூடப்பட்டதால், இலங்கைக்கு வழங்குவதற்காக சிரிஞ்ச்கள் என்ற ஊசிகளை வானூர்தி நிலையத்திற்கு கொண்டு செல்லும் வாகனம், எல்லையில் நிறுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடெல்லி உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படுவதன் காரணமாகவே இது மேற்கொள்ளப்பட்டது.
எனினும், புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, டெல்லி வானூர்தி நிலையத்திற்கு, குறித்த ஊசிகளின் தொகையை எடுத்துச் செல்ல உதவுமாறு கோரியுள்ளது.
உடனடியாக செயற்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சு, டெல்லி காவல்துறை தலைமையகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கு இதற்கான உத்தரவுகளை பிறப்பித்து, ஆகஸ்ட் 14 ஆம் திகதி குறித்த ஊசிகளை இலங்கைக்கு அனுப்ப உதவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..