23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மகிந்த மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு பயணம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாக புனித பாப்பரசரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை சந்தித்து தெளிவுபடுத்த ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலிக்கு அடுத்த வாரத்தில் விஜயம் செய்யவுள்ள ஸ்ரீலங்கா பிரதமர், பாப்பரசரை சந்திப்பதற்கான கோரிக்கையை முன்வைத்திருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் ஐ.பி.சி தமிழிடம் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரம் இத்தாலிக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இத்தாலி பொலொக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் ஐரோப்பிய மாநாடொன்றில் ஸ்ரீலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ள செல்லும் பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் செல்லவுள்ளார்.

இந்த மாநாட்டின் பின்னர் வத்திக்கானுக்கு செல்லவுள்ள மஹிந்த ராஜபக்ச அங்கு புனித பாப்பரசரை சந்தித்து ஆசி பெறவுள்ளார். அதேபோல் 2019ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இந்த சந்திப்பில் பாப்பரசருக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார். கடந்த மாதம் அவர் பாப்பரசருக்கு விசேட கடிதமொன்றையும் அனுப்பிவைத்திருந்ததோடு, ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து கவனம் செலுத்தும்படியும் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முக்கிய பிரதிநிதிகளையும் ஸ்ரீலங்கா பிரதமர் இந்த விஜயத்தின்போது சந்திப்பாரென தெரிவிக்கப்படுகிறது. இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், நேரடியாக அமெரிக்கா சென்று ஐ.நா பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்தோடு ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இணையவழி ஊடாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொள்வார் என்று ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்காப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 





மகிந்த மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு பயணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு