28,Mar 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள்

ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் 72 பேர் அந்நாட்டுப்பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஓமானில் பணிபுரியும் இலங்கைப்பெண்கள், தாம் மீண்டும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி முதல் சுமார் இருவாரகாலமாக ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த 8 ஆம் திகதி சுமார் 10 பேரால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் 9 ஆம் திகதி மேலும் 10 பேரும், 14 ஆம் திகதி மேலும் 5 பேரும் இணைந்துகொண்டனர்.


இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் பலர், தாம் பணிபுரியும் வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தப்படுவதாகவும் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன் தம்மை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத்தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.


ஓமானில் பணிபுரியும் பெண்களில் பலர் இலங்கையிலுள்ள பதிவுசெய்யப்படாத முகவர்களினால் ஏமாற்றி அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அங்கு சென்றதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டிய பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் தலைவி ஷ்ரீன் ஸரூர், இதுகுறித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் பேசிய போதிலும் சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை என்று கவலை வெளியிட்டார்.


ஓமானில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இலங்கைப்பெண்கள் துன்புறுத்தல்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறுகோரி ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களான டொமொhயா ஒபொகாட்டா மற்றும் சியோபென் முலேலி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 




ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு