கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உணவுக்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும், எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உழ்ஹிய்யா வழங்குவதற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (20) சுகாதார வைத்திய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆடு, மாடுகளை அறுப்பதற்கான விசேட பொறிமுறைகளை வகுத்து செயற்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுகாதார வைத்திய அதிகாரிகள் தத்தமது பிரதேசங்களில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்ப் பரவலின் தன்மை மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகளை கவனத்திற்கொண்டு பிரதேச உலமா சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் விசேட தீர்மானங்களை எடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பாளரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நோய்வாய்ப்பட்ட மாடுகளை அனுமதி பெறாமல் வெட்டுபவர்களின் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..