வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வடக்கு மாகாணத்துக்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கான காணியை பெற்றுத்தருமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடினேன்.
மேலும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் ஃபேர் - 2023 நாளை சனிக்கிழமை (15) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (16) யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதன் மூலம் ஆட்கடத்தலை தடுக்கவும், பல்வேறு கடத்தல்களில் சிக்குபவர்களை தடுக்கவும், தொழில்வாய்ப்புகளுக்கு பயிற்சி பெறாதவர்களுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லவும், வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்கு தேவையான விழிப்புணர்வு வசதிகளை ஏற்படுத்தவும் நாம் செயற்பட்டு வருகிறோம்.
கொழும்புக்கு வந்து எமது அமைச்சின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும், நீங்கள் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றோம்.
ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான விடயங்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தூதரகத் துறையின் சேவைகள் முதலானவற்றை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் க்ளோபல் ஃபேர்-2023இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
0 Comments
No Comments Here ..