09,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை, ஊடக அடக்குமுறை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023 அன்று சைவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் திங்கட்கிழமை 17.07.2023 முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் ஆகியோரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பெரும்பாண்மை இனத்தவர்களாலும் மற்றும், பௌத்த துறவிகளாலும் குழப்பம் விளைவிக்கப்பட்டதுடன், பொங்கலுக்காக அங்கு தீமூட்டப்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலும், பெரும்பாண்மை இனத்தவர் ஒருவராலும் சப்பாத்துக்கால்களால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது.


அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகைதந்த சைவத்தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் பொலீசாரால் தாக்கப்பட்டுமிருந்தனர்.

இந் நிலையில் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சைவழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டிருந்ததுடன், சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.


அத்தோடு குறித்த நாளில் குருந்தூர்மலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் தள்ளிவிடப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.

குறிப்பாக சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடக அடக்குமுறை என்பவற்றில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை, ஊடக அடக்குமுறை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு