மந்தமாகும் உலக பொருளாதார சூழலில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை தக்க வைத்துக்கொள்ள பல முயற்சிகளை செய்து வருகிறது. வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை இணையதள வாயிலாக தேடுபவர்கள் பெரும்பாலும் லிங்க்ட்-இன் (LinkedIn) தளத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். இதற்கு போட்டியாக டுவிட்டர் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் "உறுதி செய்யப்பட்ட கணக்கு" (Verified Accounts) எனும் அந்தஸ்தை பெற்ற நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளுக்கு ஒரு புது வசதியை கொண்டு வருகிறது. நிறுவனங்களின் டுவிட்டர் பக்கத்தில் "பயோ" (Bio) எனும் அவர்களை குறித்த சுயவிவரங்கள் இடம் பெறும்.
புது வசதியின் மூலம் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை இந்த பயோ பகுதிக்கு கீழே கொடுக்க முடியும். இதன் மூலம் வேலை தேடி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களின் இணையதளத்தை அடைந்து அந்தந்த நிறுவனங்களில் உள்ள வேலைகளை குறித்து விவரமாக அறியவும், சுலபமாக விண்ணப்பிக்கவும் முடியும். @டுவிட்டர்ஹயரிங் என்ற பெயரில் வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளுக்காகவே ஒரு கணக்கை டுவிட்டர் தொடங்கி இருக்கிறது. நிமா ஓஜி எனும் செயலி ஆராய்ச்சியாளர் இது குறித்து ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதிலிருந்து இந்த வசதி குறித்து கீழ்காணும் விவரங்கள் தெரிய வருகின்றன.
டுவிட்டர் ஹயரிங் (Twitter Hiring) எனப்படும் இந்த வசதி மூலம் வெரிஃபைடு கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் 5 எண்ணிக்கை வரை தங்களிடம் உள்ள வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பதிவு செய்யலாம். தங்களிடம் காலியிடங்கள் உருவாகும் போதெல்லாம் அது குறித்த விவரங்கள் சில நிமிடங்களுக்குள்ளாகவே டுவிட்டரில் வெளிப்படும் வகையில் ஒரு மென்பொருள் கட்டமைப்பை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். வேலை வாய்ப்பை தேடுவோர்கள் இதன் மூலம் நிறுவனங்களின் இணையதளங்களுக்கு சென்று மேல்விவரங்களை அறியவும், விருப்பமிருந்தால் விண்ணப்பிக்கவும் முடியும். கடந்த மே மாதமே வேலைவாய்ப்பு தகவல் பரிமாற்ற வசதியை டுவிட்டரில் கொண்டு வர ஆலோசிப்பதாக சூசகமாக அறிவித்திருந்தார் டுவிட்டர் நிறுவன அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க். அவர் முன்பே அறிவித்திருந்தபடி, டுவிட்டர் செயலியை "எல்லாவற்றிற்குமான செயலி"யாக மாற்றும் முயற்சியில் ஒன்றாக இந்த வசதியும் பார்க்கப்படுகிறது. வெரிஃபைடு பயனர் அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு இலவச சேவையாக இந்த வசதியை டுவிட்டர் வழங்கும் என தெரிகிறது.
0 Comments
No Comments Here ..