எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால் உடன்படிக்கை தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு, உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, உடன்படிக்கை தொடர்பிலும், அதன் உள்ளடக்கம் மற்றும் அதில் இருக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கோ அல்லது சங்கத்திற்கோ அல்லது நிறுவனத்திற்கோ கருத்துகள், தகவல்கள் மற்றும் யோசனைகளை அந்த நிபுணர்குழுவிற்கு சமர்ப்பிக்க முடியும் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர், தலைவர் எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழு, அலரிமாளிகை கொழும்பு - 03 என்ற முகவரிக்கு அஞ:சல் மூலமாக குறித்த விடயங்கள் அடங்கிய ஆவணத்தை அனுப்பிவைக்க முடியும்.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கருத்துகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் மேலதிக தகவல்களை வினவுவதற்கு அவசியம் என நிபுணர்குழு தீர்மானிக்கும் பட்சத்தில், அதன் முன்னிலையில் கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களை தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பனவற்றை பதிவுசெய்து தங்களது கருத்துகளை அனுப்பிவைக்குமாறு அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
0 Comments
No Comments Here ..