04,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்ஸ் புடாபெஸ்ட் 23 போட்டியில் இலங்கையிலிருந்து 7பேர் தெரிவு

ஹங்கேரியின் புடாபெஸ்ட் தேசிய மெய்வல்லுநர் நிலைய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்ஸ் புடாபெஸ்ட் 23 (World Athletics Championships Budapest 23)  போட்டியில் இலங்கையிலிருந்து 6 விரர்களும் ஒரு வீராங்கனையும் பங்குபற்றவுள்ளனர்.

ஓகஸ்ட் 19ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இப் போட்டியில் 202 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கையிலிருந்து ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே (இலங்கை அணித் தலைவர்), அருண தர்ஷன, பபாசர நிக்கு, பசிந்து கொடிகார, ராஜித்த ராஜகருண, டினூக்க தேஷான், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நடீஷா தில்ஹானி லெக்கம்கே ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.


இலங்கையின் தொடர் ஓட்ட அணியினர் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எனினும், உலக மெய்ல்லுநர் சம்பயின்ஷிப்ஸுக்கான இலங்கை தொடர் ஓட்ட அணியில் பெயரிடப்பட்டுள்ள 6 பேருக்கும் பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கும் என கூறமுடியாது.

ஹிரஞ்சன் ரத்நாயக்க பயிற்றுநராகவும் அஜித் நாரகல அணி முகாமையாளராகவும் ஐராங்கனி ரூபசிங்க பெண் அதிகாரியாகவும் இலங்கை மெய்வல்லுநர்களுடன் புடாபெஸ்ட் செல்கின்றனர்.

உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்ஸ் போட்டியில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறக்கூடிய சொற்ப வாய்ப்பு இருக்கிறது.

4 x 400 ஓட்டப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா, ஜெமெய்க்கா உட்பட 17 நாடுகள் பங்குபற்றுவதுடன் 3 நிமிடங்கள், 01.56 செக்கன்கள் என்ற அதிசிறந்த நேரப் பெறுதியைக் கொண்டுள்ள இலங்கை ஒட்டுமொத்த நிலையில் 14ஆவது இடத்தில் இருக்கிறது.


இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச் சுற்றில் பங்குபற்றும் குறிக்கோளுடன் நடீஷா தில்ஹானி லேக்கம்கே பங்குற்றவுள்ளார்.

இப் போட்டியில் 25 நாடுகளைச் சேர்ந்த 37 வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.

ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற டில்ஹானி லேக்கம்கே 60.93 மீற்றர் என்ற சிறந்த தூரப் பெறுதியுடன் இப் போட்டியில் பங்குபற்றுகிறார். 

உலக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றவோரில் நடப்பு பருவ காலத்திற்கான அதிசிறந்த தூரப் பெறுதிகளின் பிரகாரம் தில்ஹானி லேக்கம்கே ஒட்டுமொத்த நிலையில் 29ஆவது இடத்தில் இருக்கிறார்.

 




உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்ஸ் புடாபெஸ்ட் 23 போட்டியில் இலங்கையிலிருந்து 7பேர் தெரிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு