சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், பும்ரா அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக இருந்தார். முதல் இன்னிங்ஸில் அவர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஐந்து போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் விளையாடுவது அவருக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால், இரண்டாவது போட்டியின்போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது பும்ரா இந்திய அணியில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.













0 Comments
No Comments Here ..