17 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. வருகிற 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் திகதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஏப்ரல் 7 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2 ஆவது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2 ஆவது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2 ஆவது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014 இல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021 இல் 2 ஆவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது.
0 Comments
No Comments Here ..