அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், மகளிா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனா். ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில், உலகின் 2 ஆம் நிலை வீரரான அல்கராஸ் 7-6 (7/5), 6-1 என்ற செட்களில், உலகின் 4 ஆம் நிலையில் இருக்கும் ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா்.
கடந்த ஆண்டும் இந்த இருவருமே இறுதி ஆட்டத்தில் மோதிய நிலையில், அதிலும் அல்கராஸே வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது. இத்துடன், இவா்கள் 6 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்கும் நிலையில், அல்கராஸ் 4 வெற்றிகளோடு முன்னிலையில் இருக்கிறாா். பெப்ரவரியில் கண்ட வலது கணுக்கால் காயத்திலிருந்து மீண்ட நிலையில் இந்தப் போட்டியில் சந்தேகத்துடனேயே பங்கேற்ற அல்கராஸ், கடந்த ஆண்டு விம்பிள்டன் சாம்பியன்ஷிப்புக்கு பிறகு முதல் முறையாக ஒரு போட்டியில் வாகை சூடியிருக்கிறாா். அல்கராஸுக்கு இது அவரது கேரியரின் 13 ஆவது பட்டமாகும்.
இந்த வெற்றியின் மூலம், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்குப் பிறகு (2014-16) இந்தப் போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை தக்கவைத்த முதல் வீரா் என்ற பெருமையைப் பெற்றாா். ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தப் போட்டியில் சாம்பியன் ஆனவா்கள் வரிசையில் 10 ஆவது வீரராக இணைந்திருக்கிறாா் அல்கராஸ்.
அடுத்தடுத்து சாம்பியனான இரு சீசன்களிலுமே ஒரே போட்டியாளரை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தியவா்கள் வரிசையில் 2 ஆவது வீரராக அல்கராஸ் இணைந்துள்ளாா். இதற்கு முன் ஜோகோவிச் இதேபோல் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரரை சாய்த்திருக்கிறாா் (2014, 2015).
21 வயதுக்கு முன்பாகவே 5 மாஸ்டா்ஸ் போட்டிகளில் சாம்பியனான 2 ஆவது வீரராக சக ஸ்பெயின் நட்சத்திரமான ரஃபேல் நடாலுடன் அல்கராஸ் இணைந்திருக்கிறாா். மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-0 என செட்களில், உலகின் 9 ஆம் நிலை வீராங்கனையான கிரீஸின் மரியா சக்காரியை எளிதாக வீழ்த்தினாா். ஏற்கெனவே இந்தப் போட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாகை சூடிய நிலையில், தற்போது 2 ஆவது முறையாக கிண்ணத்தை வென்றுள்ளாா் ஸ்வியாடெக். இவா்கள் இத்துடன் 6 முறை மோதிக்கொண்ட நிலையில், தற்போது இருவருமே தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா்.
ஸ்வியாடெக் இத்துடன் தனது 19 ஆவது கேரியா் பட்டத்தை வென்றிருக்கிறாா். இரண்டு இறுதி ஆட்டங்களிலுமே அவா் மரியா சக்காரியை தான் தோற்கடித்துள்ளாா். இந்தப் போட்டியில் குறைந்தது 2 முறை சாம்பியனான வீராங்கனைகள் வரிசையில் 10 ஆவதாக இணைந்திருக்கிறாா் ஸ்வியாடெக். இரு முறையும் ஒரே போட்டியாளரை வீழ்த்தி வாகை சூடியவா்கள் வரிசையில் 2 ஆவது வீராங்கனையாக இடம் பிடித்துள்ளாா். முதல் வீராங்கனையாக பெல்ஜியத்தின் கிம் கிலிஜ்டா்ஸ் – அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போா்ட்டை அவ்வாறு வீழ்த்தியிருக்கிறாா்.
செம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ் மற்றும் ஸ்வியாடெக்குக்கு தலா ரூ.9.11 கோடி ரொக்கப் பரிசும், தலா 1,000 ரேங்கிங் புள்ளிகளும் கிடைத்தன. 2 ஆம் இடம் பிடித்த மெத்வதெவ் மற்றும் சக்காரிக்கு தலா ரூ.4.8 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.
0 Comments
No Comments Here ..