24,Jan 2025 (Fri)
  
CH
விளையாட்டு

அதிக தூரம் சிக்ஸ் அடித்து தினேஸ் கார்த்திக் சாதனை!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த ஹென்ர்சி கிளாசென் சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ஓட்டங்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277/3 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இந்த சாதனையை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை எடுத்துக் கொடுத்தனர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 நான்கு ஓட்டங்கள் உள்பட 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் போட்டியின் 17ஆவது ஓவரில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று 106 மீ தூரம் வரை சென்றது. இதன் மூலமாக இந்த சீசனில் அதிக தூரம் சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக வெங்கடேஷ் ஐயர் அடித்த சிக்ஸர் 106 மீ தூரம் சென்றது. நிக்கோலஸ் பூரன் 106 மீ மற்றும் இஷான் கிஷான் 103 மீ தூரம் வரை சிக்ஸர் அடித்திருந்தனர்.

கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ஓட்டங்களையும், எய்டன்மெர்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ஓட்டங்களையும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பாப் டூப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக தொடங்கினர். முதல் 6 ஓவர்களில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 79 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஆனால், இந்த ஜோடி 80 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தது. விராட் கோலி 20 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். விராட் கோலியைத் தொடர்ந்து வந்த வில் ஜாக்ஸ் 7 ஓட்டங்களிலும், ரஜத் படிதார் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த பாப் டூப்ளெசிஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சௌரவ் சௌகான் ஓட்டம் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார்.

ஆர்சிபி முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது தினேஷ் கார்த்தி களமிறங்கி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தார். ஹைதராபாத்தின் ஒவ்வொரு பவுலரையும் விட்டு வைக்காமல் வாங்கிய அடியை திருப்பி கொடுத்தார். மாயங்க் மார்கண்டே வீசிய 13 ஆவது ஓவரில் மட்டும் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 25 ஓட்டங்களை எடுத்தார். உனத்கட் ஓவரில் 21 ஓட்டங்கள் எடுத்தார். கடைசியில் 12 பந்துகளில் 58 ஓட்டங்கள் தேவை இருந்தது. இதில், 18.5ஆவது ஓவரில் நடராஜன் பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ஓட்டங்களை குவித்தார். இந்த நிலையில், இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் ஒன்று அதிக தூரம் வரை சென்று சாதனையை உருவாக்கியுள்ளது. 106 மீ அதிகபட்சமாக இருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 108 மீ நீண்ட தூரம் சிக்ஸர் அடித்து கிளாசெனின் சாதனையை முறியடித்துள்ளார். இறுதியாக அனுஜ் ராவத் 25 ஓட்டங்கள் எடுத்து கொடுக்க ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை குவித்து 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பந்து வீச்சை பொறுத்த வரையில் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மாயங்க் மார்கண்டே 2 விக்கெட்டும், நடராஜன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆர்சிபி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.




அதிக தூரம் சிக்ஸ் அடித்து தினேஸ் கார்த்திக் சாதனை!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு